அறிமுகம் பகுதி-2 : என்னைச் செதுக்கிய வீரக்கலை
எனது ஜிம் பட்டி நாட்கள்…
நான் கோவை வடவள்ளியில் உள்ள சின்மையா வித்யாலயத்தில் படித்தேன். காலை 9 மணிக்கு முன் பள்ளியில் இருந்தாக வேண்டும்.
எனது நாட்கள் அதிகாலையில் துவங்கும். நான்கு மணிக்கு அப்பா எழுப்பி விடுவார். சுமார் ஒரு மணி நேரம் யோகப்பயிற்சி. அதன் பின் அப்பா கடை திறக்கச் சென்றதும் காபி குடித்து விட்டு ஜிம் செல்வேன்.
ஏறக்குறைய இரண்டு அல்லது இரண்டரை மணி நேர பயிற்சி.
தம்பில்ஸ், பார்பெல், பேரலல் பார், புல் அப் பார், பென்ச் பிரஸ், கரலை கட்டை என எடைப் பயிற்சிகள் நெட்டி முறிக்கும். இடைக்கிடையே வெற்றி அண்ணா, நாகராஜ் அண்ணா ஆகியோரிடம் இருந்து சிலம்பம் மற்றும் மல்லுக்கட்டு பயிற்சி.
அதன் பின் வடவள்ளியில் உள்ள பள்ளிக்கு ஆறு கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதிக்க வேண்டும். மாலை லிங்கனூர் சென்று டியூஷன் முடித்து விட்டு வீடு திரும்ப 7 ஆகி விடும். திரும்பும் வழி 9 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்.
சாப்பிட்டு விட்டு மீண்டும் ஜிம். மீண்டும் அதே பயிற்சி. காலை எடைப்பயிற்சி அதிகமாகவும் சிலம்பம், மல்லு குறைவாகவும் இருக்குமென்றால்.. மாலையில் சிலம்பமும் மல்லுக்கட்டும் அதிகமாக இருக்கும். காரணம், நாகராஜ் அண்ணா பால்காரர்.. அவர் மாலை நேரத்தில் தான் ப்ரீயாக இருப்பார்.. அப்போது தான் ஜிம்முக்கு வருவார்.
அந்த வயதில் ஜிம் பயிற்சி (எடைப்பயிற்சி + சிலம்பம் + மல்லு), காலையில் அப்பா சொல்லிக் கொடுக்கும் யோகம், வார இறுதிகளில் அப்பாவும், சிறிய பாட்டனாரும் சொல்லிக் கொடுக்கும் சுவடுகள், கம்பு முறைகள் என எனது நேரம் முழுமையாக “ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது”.
மைதானத்திலேயே அதிக நேரம் செலவிட்டதால் எனது உலக கண்ணோட்டங்கள் அனைத்தும் அந்த மைதானத்து விதிகளாலேயே கூர்தீட்டப்பட்டன. வீரக்கலைகளும், விளையாட்டும் போதித்த நியாயங்களையே வரித்துக் கொண்டவனானேன்.
சரியாக சொல்லப் போனால் என்னை புடம் போட்டது ஜிம்மாகத் தான் இருக்க வேண்டும். பிற்காலத்தில் நான் சந்தித்த ஒரு மாஸ்டர், “வீரக்கலை பயிற்சி மட்டும் தான் செய்ய வேண்டும். ஜிம், எடைப் பயிற்சி எல்லாம் வேஸ்ட்” என என்னிடம் அளந்து விட்ட போது நான் அவருக்கு பதில் சொல்லவில்லை.
உள்ளே சிரித்துக் கொண்டேன்.
0o0o0o0o0
பள்ளி இறுதி தேர்வு விடுமுறை நாட்களிலும், பின்னர் கல்லூரி செமஸ்டர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர் திருநெல்வேலி.
ஒன்று அல்லது ஒன்றரை மாதங்கள் ஊரில் கழியும். பெரும்பாலும் தாய்வழிப் பாட்டியின் ஊரான கண்ணநல்லூர் அல்லது அப்பாவின் பூர்வீகம் ஆனைகுடியில் (திசையன்விளைக்கு பக்கம்) தான் எனது விடுமுறை நாட்கள் கழியும்.
கண்ணநல்லூர் நம்பியாற்றுப் படுகையில் இருப்பதால் நல்ல செழிப்பாக விவசாயம் நடக்கும் ஊர். அப்பாவின் ஊரோ தேறிக்காடு. தமிழ்நாட்டிலிருக்கும், பலரும் அறியாத பாலைவனம்.
ஊர் எதுவாயினும், அடிமுறைப் பயிற்சி அங்கும் விடாது தொடரத்தான் செய்தது. கோவையில் உடன் விளையாடிய நண்பர்கள் கொஞ்சம் மென்மையான உடலும், அணுகுமுறையும் கொண்டவர்கள். ஊரிலோ எல்லோரும் கரடு முரடானவர்கள். காயம் படாமல் வீடு திரும்பிய நாட்கள் என்று எதுவும் இருக்காது.
விடுமுறை முடிந்து கோவை திரும்பிய பின் அடிவாங்கிய தழும்புகளை எண்ணிப் பார்த்துக் கொள்வது ஒரு பொழுது போக்கு.
வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல், “போன வருசம் லீவில் 21 அடி வாங்கினேன். இந்த வருசம் 18 அடி வாங்கியிருக்கேன். அப்படின்னா இந்த வருசம் 3 அடி நமக்கு லாபம் ஆச்சே” - இவ்வாறு தான் நிலைமை இருக்கும்.
பள்ளி / கல்லூரி திறந்து ஓரிரு வாரங்கள் நொண்டி நொண்டி நடப்பது சர்வ சாதாரணம்.
0o0o0o0o0o0
கல்லூரி சென்று படித்தது டிப்ளமோ தான். அதன் பின் இளங்கலையும், முதுகலையும் வேலைக்கு சென்று கொண்டே பகுதி நேரமாகத் தான் படித்தேன்.
டிப்ளமோ முடித்த உடன் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வூவில் சேர்ந்தேன்.
விளையாட்டு, வீரக்கலை என பயிற்சியில் முழுமையாக இருந்ததால் எனக்குத் திறந்திருந்த மற்றும் ஒரே ஒரு ஜன்னல் படிப்பு மட்டும் தான். எனவே கல்லூரியில் எனது வகுப்பில் இறுதி ஆண்டு தேர்வு வரை அரியர்ஸ் வைக்காமல் பாஸ் செய்த ஐந்தே ஐந்து பேரில் நான் 78 வழுக்காடு மதிப்பெண்ணுடன் இரண்டாவது இடத்தில் இருந்தேன்.
இது அசாதாரணமான மதிப்பெண் என்று சொல்ல முடியாது தான். ஆனால், இன்றைக்கு சிரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ் என பெயர் மாற்றப்பட்ட கல்லூரியின் அன்றைய பெயர் வி.எல்.பி ஜானகி அம்மால் இன்ஜினியரிங் காலேஜ். இன்றைக்கு தமிழ் நாட்டில் டாப் 10 கல்லூரிகளில் ஒன்றாக மதிப்பிடப்படும் எங்கள் கல்லூரியின் நிலை 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என அறிந்தவர்களுக்கு 78 வழுக்காடு மதிப்பெண்ணின் அன்றைய மதிப்பு புரியும் :)
பள்ளி / கல்லூரி கல்வி மட்டுமின்றி எனது வாசிப்பின் எல்லை சற்றே விரிவானது - அதைப் பற்றி மற்றொரு தருணத்தில் கூறுவேன் - இப்போதைக்கு எனது தனிப்பட்ட நூலகத்தில் சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன என்பதை மட்டும் சொல்லி விட்டு கடந்து போகிறேன்.
கல்லூரி இறுதி ஆண்டின் போதே ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூவில் சேர்ந்தேன் என்று சொன்னேன் அல்லவா…
அந்த வேலை என்னை பல ஊர்களுக்கு இட்டுச் சென்றது. அந்தப் பயணம் என்னை பல அசான்களிடம் கொண்டு சேர்த்தது.
எனது பிரியமான ஜிம் பட்டியும், மல்லுக்கட்டும், ஜித்தோ குகாய் கராத்தேவும் முழுவதுமாக என்னை விட்டு பிரிந்தது.
சிலம்பமும், அடிமுறையும் தற்காலிகமாக என்னை விட்டு விலகி பின்னர் ஒரு சந்தர்பத்தில் என்னோடு இரண்டரக் கலந்தது.
பயணம் தொடரும்….
Comments
Post a Comment