எனது அறிமுகம்

வணக்கம், 

வீரக்கலை குறித்த எனது கண்ணோட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் துவங்கப்படும் இரண்டாவது வலைப்பூ இது என நினைக்கிறேன். முன்பும் இவ்வாறு ஒரு முயற்சியைத் துவங்கி பின் நேரமின்மை காரணமாக இடைநிறுத்தி உள்ளேன். 

இந்த முறை தொடர்ச்சியான இடைவெளியில் பதிவுகள் வெளியிட்டு வலைத்தளத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க தீர்மானித்துள்ளேன்.. இறைவனின் திருவுளப்படி நடக்கட்டும். 

 0o0o00o0 

 சுய அறிமுகம்..! 

 81ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த எனக்கு இன்றைய அளவில் 43 வயதாகின்றது. சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள ஆனைகுடி. படித்ததெல்லாம் கோவையில்.

வீரக்கலை அறிமுகம் ஏற்பட்டது எனது 10ம் வயதில். பள்ளி விடுமுறைக்கு தாய்வழிப் பாட்டியின் சொந்த ஊருக்குச் சென்ற போது நாட்டுச் சுவடுகள் அறிமுகமானது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வு விடுமுறைக் காலமான ஒன்றரை மாதங்களும் நாட்டுச் சுவடு பயிற்சியில் கழிந்தன. 

11ம் வயதான போது கோவை பகுதியில் உள்ள ‘ஜிம் பட்டியில்’ சேர்த்து விட்டார் என் தந்தை. அங்கே சுப்பிரமணி ஐயாவின் மாணவர்கள் நாகராஜ் அண்ணா மற்றும் வெற்றி அண்ணாவின் மூலம் சிலம்பமும் மல்லுக் கட்டும் அறிமுகமானது. 

அதே காலகட்டத்தில் எனது சிறிய பாட்டனார் மற்றும் தந்தையின் மூலம் எங்கள் முன்னோர்களுக்கு சொந்தமான சுவடு முறையும் கம்பு முறையுமான நந்தி வழிப்பாடங்கள் அறிமுகமாகத் துவங்கியது.

 o0o0o0o0 

 எனது தந்தையார் திரு கோவில்ராஜ் அவர்கள் யோகாசன கலையில் நல்ல தேர்ச்சி பெற்றவர். சிலம்பம் மற்றும் சுவடுகள் அறிந்தவர். இன்றும் தனது 76 வயதில் விடாது யோகம் மற்றும் பிராணயாம பயிற்சியை விடாது செய்து வருகின்றார். 

அடிப்படையில் சற்றே முற்போக்காக சிந்திக்கும் வழக்கம் கொண்ட என் தந்தை, எனது 14வது வயதில் கராத்தே வகுப்பில் என்னை சேர்த்து விட்டார். நாட்டுச் சுவடுகள் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட பரம்பரை கலைகளுக்கு ஒரு நவீன வடிவமும் மறுவார்ப்பும் தேவை என்பது அவரது கருத்து. குறிப்பாக கராத்தே, தைகுவாண்டோ போன்ற நவீன வீரக்கலை பயிற்சியும் ஜிம் பயிற்சியும் முக்கியமானது என அவர் கருதினார். 

நவீன கலைகளின் கட்டுமானத்தை அடியொற்றி நமது பாரம்பரிய கலைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்கிற அவரது சிந்தனை எனக்கும் ஏற்பட்டது. பின் நாட்களில் பல்வேறு ஊர்களில், பல்வேறு ஆசான்களையும், விதம் விதமான வீரக்கலைகளையும் தேடிய எனது தேடல்களுக்கு என் தந்தை எனக்குள் விதைத்த இந்த கண்ணோட்டம் ஒரு காரணமாக அமைந்தது. 

அந்த தேடல்கள் குறித்தும் அவற்றின் வழியே நான் கற்றுக் கொண்ட கலைகள் குறித்தும் அடுத்த பகுதியில் எழுதுகின்றேன். 

 0o0o0o0

Comments

Popular posts from this blog

அறிமுகம் பகுதி-2 : என்னைச் செதுக்கிய வீரக்கலை